Saturday, May 26, 2012

மதுரமங்கலம் (Madhuramangalam)



எம்பார் ஸ்வாமிகளின்  (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர் ) அவதார ஸ்தலம்.

தூரம் : சென்னையில் (கிண்டியில்) இருந்து 57 KM

வழி : சென்னை - பெங்களூர் ஹைவேயில் சுங்குவார் சத்திரம் ( 49  KM )அடைந்தவுடன் வலது புறம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். சுமார் 8  KM தொலைவில் மதுரமங்கலம் உள்ளது. 

சுங்குவார் சத்திரத்திலிருந்து  குறிப்பிட்ட நேரங்களில் டவுன் பஸ் வசதி உண்டு.

   
மூலவர்         : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்
உத்சவர்        : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்
தாயார்           : கமலவல்லி
புஷ்கரணி    : கருட புஷ்கரணி

வரலாறு  :

மழலைமங்கலமாக இருந்த இவ்வூர் காலப்போக்கில் மதுர மங்கலமாக மருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த க்ஷேத்ரம்  எம்பார் ஸ்வாமிகளின்  அவதார ஸ்தலம்.  எம்பார்  சுவாமிகள் ஸ்ரீ ராமானுஜர் பிறந்து 9 ஆண்டுகள் கழித்து அவதரித்தவர்.
ஸ்ரீ ராமானுஜருக்கு சகோதர முறை உறவினராவார்.எம்பார் சுவாமிகள் ஆரம்பத்தில் சிவ பக்தராக இருந்து, ஸ்ரீ ராமானுஜர் & ஸ்ரீ திருமலை நம்பிகளது முயற்சியால் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். ஸ்ரீ ராமானுஜரால் எம்பெருமானார் என்று பெயரிடப்பட்ட சிறப்புக்குரியவர்.


எம்பார் சுவாமிகள் பெரிய திருவடி கருடாழ்வாரின்  அவதாரமாகக் கருதப்படுகிறார்.  ஆகையாலே  இங்கு உள்ள புஷ்கரணி கருட புஷ்கரணி  என்றழைக்கப் படுகிறது.   இக்கோவில் சுமார் 1000  ஆண்டு பழமையானது என்றும்  தொண்டை மண்டல மன்னர் சுபர்ணா என்பவரால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


எம்பார் சுவாமிகள் திருவாராதனம் செய்த பெருமாள் இங்கு  உள்ள  ஸ்ரீ வைகுண்டப்  பெருமாள்.

எம்பார் ஸ்வாமிகளின் அவதாரத் திருநக்ஷத்ரம்  ஆகிய   புனர்பூசம்  இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதே போன்று தை மாதத்தில் எம்பார் சுவாமிகளுக்கு மஹா உற்சவம் புனர்பூச  நக்ஷத்திரம்  வரை  பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறுகிறது.


சித்திரை மாதத்தில் ஸ்ரீ வைகுண்டப்  பெருமாளுக்குப் பிரமோத்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசியும் இங்கு முக்கிய விழாவாகும்.

எம்பார் சுவாமிகளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும் என்பது நம்பிக்கை.


குறிப்பு :  கோவில் அருகே கடைகள் எதுவும் கிடையாது. ஆகவே புஷ்பம், அர்ச்சனைத் தட்டு போன்றவற்றை சுங்குவார் சத்திரதிலிருந்தே வாங்கிச் செல்வது நன்று.


.
தற்பொழுது இந்தக் கோவில் தேரைப் புதுப்பிக்கும்  திருப்பணி நடை பெற்று வருகிறது.

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 - 12.௦௦ மணி, மாலை 4 .30 - 8.௦௦ மணி வரை. (விசேஷ காலங்களில் மாறக் கூடும்)


மேலும் விவரங்களுக்கு  : ஸ்ரீ வைகுண்டப்  பெருமாள் திருக்கோவில், மதுரமங்கலம், காஞ்சிபுரம் தாலுகா 602 114
http://www.madhuramangalamjeeyar.org/

 

அருகில் உள்ள கோவில்கள்   : 

1. நீர்வள்ளுர் (சுமார் 8  KM  ) - ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள்
2. நரசிங்கபுரம் ( சுமார் 15  KM  ) .  மப்பேடு கூட்டு  ரோட்டிலிருந்து இடது புறம் திரும்பி பேரம்பாக்கம்  சாலையில் சென்று கோவிலை அடையலாம்

3 . திருவள்ளூர் (சுமார் 28  KM ) - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்


4. ஸ்ரீ பெரும்புதூர் ( சுமார் 20 KM ) - ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோவில்


 


Saturday, April 28, 2012

Maiden post

ப்ளாக் ஆரம்பிப்பது அல்லது எழுதுவது என்பது  ஒரு கனவாகவே ரொம்ப நாளாக இருந்து வந்த ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்வதும் எழுந்திருப்பதும் நடந்ததே  ஒழிய உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. பள்ளியில் கணக்கு டீச்சர் சொன்னது ஞாபகம் வந்தது. எழுத எழுததான் கணக்கு புரியும். அது ப்ளாக்க்கும் பொருந்தும்ங்கறது உண்மைதான். எல்லா குழப்பமும் வந்தது. தமிழ்ல எழுதறதா இல்லை இங்கிலிஷ்ல எழுதறதா ? எப்படி ஸ்டார்ட் பண்றது ? எத மொதல்ல எழுறது ? நடுவுல ஒயிப் வேற கேக்க ஆரம்பிச்சுட்டா உங்களுக்கு ஏன் இந்த விஷ பரிட்சைன்னு?

ரொம்ப குழம்ப வேண்டாம்,  நீங்க  ப்ளாக் எழுத ஆரம்பிச்ச  கதையே நம்பளோட முதல் போஸ்டா இருக்கட்டும்னு கடைசியா தர்ம பத்தினியே ஒரு ஐடியா கொடுத்து வைக்க சுப யோக சுப தினமா இன்னிக்கு முதல் போஸ்டை ஆரம்பிச்சாச்சு.

என்னை பத்தி சொல்லணும்னா, பூர்வீகம் ராஜ மன்னார்குடி. படிச்சது நேஷனல் ஹையர்  செகண்டரி ஸ்கூல். திருச்சியில்
சேஷசாயி இன்ஸ்ட்யுட்டில்    மெக்கானிகல் இன்ஜினியரிங் டிப்ளமா. பிற்பாடு பிட்ஸ் பிலானியில் சேர்ந்து   MS படிச்சு  முடிச்சு தற்சமயம் மெட்ராஸ்ல ஒரு பிரைவேட் கம்பெனியில் உத்தியோகம். 

ஆரம்ப காலத்துல ஊர் ஊரா சுத்தறதே  வேலையா இருக்கப் போக, அதுவும் இல்லாம கல்கத்தா பக்கமாவே போஸ்டிங் வேற. சின்ன வயசுல அப்பா திட்டி திட்டி ஹிந்தி கிளாஸ்ல சேர்த்து  விட்டதுனால, ஹிந்தி படிக்கவும் கத்துண்டாச்சு. ஹாஸ்டல் நாள்லேந்தே கிடைச்சதை சாப்பிடறதும் பழக்கமாச்சு.  இது எல்லாம் சேர்ந்து ஊர் சுத்தறதை ஒரு பிடிச்ச விஷயமா மாத்திருக்கு.

போறாத குறைக்கு இளைய மச்சினன் பார்த்தசாரதியும் சப்போர்ட் பண்ண ஆரம்பிக்க, டூர் போறதுங்கறது  become a passion nowadays .

 காலேஜ் நாட்களில் மலைக்கோட்டையும் ஸ்ரீரங்கமும்தான்
weekend getaway .  இப்போ கூட  பொதுவாவே வீக் என்ட்ஸ்லாமே எதாவது கோவில் விசிட்தான். அப்பப்ப நார்த் இந்தியா பக்கமும் போறதுண்டு.

Profile  பேஜ்ல அப்டேட் பண்றத ஒரு போஸ்ட் புல்லா எழுதியாச்சு.

இனிமே  நம்பளோட travel ஐப் பத்தி மொதல்ல எழுத ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். ஆனா ஒரு பக்கம் எழுதுவதுங்கறதே மூணு மணி நேரம் புடிச்சுது. ஓகே. ஒரு வழியா ஸ்டார்ட் பண்ணிட்டோம்.

Next சண்டே continue பண்றேன். Bye